Saturday, March 14, 2009

ஏப்ரல் 12, 2006.

இன்று..
என் பிறந்த நாள்..
என் அம்மாவுடனும் தோழிகளுடனும் கொண்டாடினேன். பரிசு கொடுக்க வந்த என் கிறிஸ்துவ தோழி மெட்டில்டா, இரக்கமற்ற இறைவனிடம் அம்மாவின் உடல் நலனுக்காக இறை அருள் வேண்டினாள். பின், அம்மா அவளின் கைகளை பற்றிக் கொண்டு. "ம்மா, அவளுக்குன்னு யாரும் இல்ல.. நீ தான் கூட பொறந்தவ மாதிரி பாத்துக்கணும். என் உடம்ப நெனச்சா எனக்கு பயமா இருக்குமா" என்று கண் கலங்கிய அந்த தருணத்தை, என் தோழி இன்றும் என்றும்' மறந்திருக்க மாட்டாள். முதன்முறையாக, பிறந்த நாள் அன்றுமாக அம்மாவை விட்டு தோழி உடன் உறங்கினேன்....

ஆனால், இன்றைய தினம் நான் கண் விழித்ததை என்னால் மறக்கவே முடியாது... "ராஜாத்தி" என்று அழைத்த படியே அம்மா, உறங்கி கொண்டிருந்த என்னை பின்பக்கமாக அணைத்து கொண்டாள். தலை கோதிய படியே, அவள் கொடுத்த முத்தம் நித்தமும் தித்திக்கிறது... நான் சிணுங்கிய படியே தலையினைலிருந்து என் அம்மாவின் மடிக்கு இடம் பெயர்ந்தேன். அரை தூக்கத்தில் இருந்து என்னை அள்ளி எடுத்து கொஞ்சினாள். கொஞ்சிய படியே துயில் எழுப்ப பட்ட நான்... எழுந்து அம்மாவின் அருகில் அமர்ந்து அழுத்தமான முத்தத்தை பதித்தேன்.

"என் அம்மா", "ராஜாத்தி" என்ற கொஞ்சல், சிணுங்கி கொண்டே விழிக்கும் அந்த உறக்கம்,அம்மாவின் மடியில் மட்டுமே கிடைக்கும் அந்த மயக்கம்.......

ம்ம்ம்...

ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் நான்....
அது எனக்கு கிடைக்கும்....!

நான்...

நான்...
வீட்டின் இரண்டாவது பெண் பிள்ளை.
9 வயதில் தந்தையின் கதகதப்பை இழந்தேன் என்றாலும் அம்மாவின் அரவணைப்பால், என் அகராதியில் 'அழுகை' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது வளர்ந்தேன். ஆனால், நான் 19 யை எட்டிய போது, விதி சதி செய்து, மதியால் வெல்ல முடியாது மரணத்தை என் அம்மாவிற்கு பரிசளித்து என்னை ஆணி வேர் அற்ற ஆலமரமாய் நிர்கதியை நிற்க செய்தது...
இப்போது..
அக்காவின் அரவணைப்பில் ???
அல்ல.. அல்ல...
அடைக்கலத்தில்....!
மீண்டும் என் அம்மாவுடன்.......... விரைவில்????

Wednesday, March 11, 2009

என் முதல் குரல்....

உள்ளத்தில் உறங்கி கிடக்கும் உணர்வுகள் உயிர் பெற்று, உதடு முளைத்து உரையாற்ற துடிக்கிறது.... என் வாழ்வில் இந்த நாள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கிறது.

கண்களை இறுக்கி கதறும் சில மணித்துளிகளும்...
கண்களை விரித்து ஆச்சரியம் கொள்ளும் பல மணி நேரங்களும்...
உங்களோடு பகிர விழைகிறேன்...

இப்படிக்கு,

பாலா ஹேமக்குமார்...